வியாழன், 29 அக்டோபர், 2015

புகைப்படம்


சிறுகதை - ஊர் காசு


சிறுகதை - ஊர் காசு
--------------------------------------
- செங்கான் கார்முகில்



எந்த விளையாட்டில் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் ஒவ்வொரு பேருந்து வரும்போதும் பேருந்து நிலையத்திற்கு ஓடி வந்துவிடுகிறான் செல்லதுரை.

இன்று காலையிலிருந்தே அப்படித்தான் இருக்கிறான். நேற்று சாயங்காலம், கூரை மேலிருந்து காக்கை கரைந்தபோது, “காக்கா கத்திக்கிட்டே இருக்கு. விருந்துகிருந்து வருதோ என்னமோ’’ என்று அவன் அம்மா முனகிக்கொண்டதுதான் காரணம்.

அவன் அம்மாவைப் பொறுத்தவரை வரப்போகிற விருந்தாளி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் செல்லதுரைக்கு விருந்தாளி என்றால் அவன் மாமா ஞாபகம்தான் வரும். மாமா என்றால் அவனுக்கு அம்புட்டு இஷ்டம். பொட்டு காத்துகூடப் புகமுடியாதபடி இறுக்...கிப் போர்த்திக்கிட்டாலும் போர்வைமேல் குந்திக்கிட்டு போகவேமாட்டேன்னு இருக்கிற கொசுவுமாதிரி மாமாவோடேயே ஒட்டிக்கிட்டுத் திரிவான்.
அதுக்குக் காரணம் ரெண்டு.

ஒண்ணு, அவர் வாங்கிவரும் தீனிசாமான்கள். இன்னொன்னு, ஊருக்குத் திரும்பிப் போகும்போது அவர் கொடுத்துவிட்டுப் போகும் காசு. ஊருக்குப் போகும்போது தருவதால் அதுக்கு ‘ஊர் காசு’ன்னு பேரு.

கடைகண்ணிக்குப் போகும்போது தோளில் அவனை உட்கார வைத்துக்கொள்வது, மல்லாக்கப் படுத்துக்கிட்டு வயிற்றுமேல அவனை குந்தவைத்துக்கொண்டு கேள்வி கேட்பது அல்லது அவன் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்வது, ராத்திரியில் அவன் தூங்கறவரைக்கும் கதை சொல்வது, விடியற்காலையில் டீ கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் மேசைமேல் உட்காரவைத்து ‘வட்டாசெட்’டில் டீ வாங்கி ஆற்றி ஆற்றி பருக்குவது அல்லது டீயில் நனைத்த பன்னை ஊட்டிவிடுவது, கிழிந்த புத்தகத்தைக் கோந்துபோட்டு ஒட்டித் தருவது, ‘இந்த வருசஷம் பாஸ் பண்ணிப் புட்டினா ஒனக்கு பேண்டு சட்டை எடுத்துத் தாரேன், பொட்டாட்டம் படிக்கிணும் சரியாய்யா’னு சலுகைகள் அறிவிக்கிறது ஆகிய இதுவெல்லாம் அடுத்ததுதான்.
அவருக்கும் செல்லதுரை மேல ரொம்பப் பிரியம். ‘தொரை _ தொரை’ன்னுக்கிட்டே இருப்பார். ‘அது இல்ல இது இல்லேன்னு தங்கச்சிபுள்ள எதுக்கும் ஏங்கிப் போயிரக் கூடாது’ என்பதில் நூறு சதவீதம் ஈடுபாட்டோட இருப்பார்.

லீவு நாட்களில் சைக்கிளில் வந்து தன் ஊருக்குக் கூட்டிப் போய்விடுவார். அவருடைய ஊருக்குப் போய்விட்டால் போதும் முடிவெட்டி, அழகாக்கி, குளிப்பாட்டி, பவுடர் பூசி... என சகல சவர்ட்டனைகளும் பலமாக இருக்கும் இவனுக்கு. அவரே போட்டுவிடும்வரை கையிலேயே  வைத்துக் கொண்டிருப்பான் சட்டையை. காட்டுக்குப் போகும்போது வெளிமாடத்தில் தக்காளிச் சோறு, புளியோதரை, கூட்டாஞ்சோறு மாதிரி ஏதேனுமொரு கிளறிய சோற்றையும் பட்டாணிக்காரணோ, பேரிக்காய் விற்பவனோ வந்தால் வாங்கித்திங்க நாலணாவும் வைத்துவிட்டுப் போவார். மதியத்திற்கு அந்த சோற்றுச் சட்டியை எடுத்துத் தரச்சொல்லி பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம் சொல்லிவிட்டுப் போவார். ‘தனக்கு எட்டாத உயரத்தில் ஏன் மாமா (சோற்றையும்) காசை வைத்துட்டுப் போறார்’ணு யோசிப்பான் இவன். கையில குடுத்தா தொலைத்து விடுவான்ங்கிறது அவர் யோசனை. எங்காவது விளையாடிவிட்டு வந்து பார்ப்பான். பட்டாணிக் காரரோ பேரிக்காய்காரரோ காசை எடுத்துக்கொண்டு தீனியை மாடத்தில் வைத்துவிட்டுப் போயிருப்பார். அத்தனை ஏற்பாடுகள் செய்திருப்பார் மாமா. சட்டை ‘சேப்’பில் வைத்துக்கொண்டு இக்கினி இக்கினியாக பொழுதினிக்கும் திம்பான்.
வேலை கலைந்து வரும்போது கடைகண்ணிகளில் வாங்கிய ஏதாவதொரு தீனிப் பொட்டலத்தோடு பயல்கள் விளையாடுமிடத்திற்கு தேடிவந்து சற்று தள்ளி நின்றுகொண்டு ‘தொரே...ய்’ என கூப்பிட்ட அவர் குரலுக்கு ஓ....டி வரும் அவனது அழகில் உருகிப் போய்விடுவார் மாமா. இத்தனை ஆத்மார்த்தம் ‘துரை’மேல் அவன் மாமாவுக்கு.

பொழுதிருட்ட வந்த கொளக்காநத்தம் டவுன் பஸ்ஸிலிருந்து அவர் இறங்கியதும் ‘மா...மா...’ன்னுக்கிட்டே ஓடிவந்து கையிலிருந்த பையை வாங்கித் தோளில் மாட்டிக்கொண்டு அவர் ஆள்காட்டி விரலைப் பிடித்துக்கொண்டு வந்தான்.
புது சட்டையும் நிறைய தின்பண்டங்களும் வாங்கி வந்திருந்தார். புதுச்சட்டையை போட்டுவிட்டு அழகு பார்த்ததும் கழட்டச்சொல்லி மடித்து பெட்டிக்குள் வைத்தாள் அம்மா. அப்போதைக்கு மட்டும் திங்க தீனி கொடுத்துவிட்டு மீதியை தூக்குப்போவணிக்குள் வைத்து எறும்பு புகாமல் மூடி கூரைக்கழியில் தொங்கவிட்டாள்.
மாமா மடியில் உட்கார்ந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்சிக் கொஞ்சித் தின்றான், வேகமாகத் தின்றால் சீக்கிரமே தீர்ந்துபோய்விடும் என்பதால்.

வீட்டிற்குப் பின்புறம் அம்மா போகிற நேரம் பார்த்து கிளம்பிவிட்டான். சினேகிதர்களுடன் குந்திக்கொண்டு இக்கினி இக்கினியாக அவர்களுக்கும் கொடுத்துச் சாப்பிடுவான். நண்பர்களோடு இப்படிச் சாப்பிடுவதில் ஒரு மனப்புலர்வு அவனுக்கு. ‘எங்க மாமா வாங்கிட்டு வந்திச்சி’ என்று வேறு சொல்லிக்குவான். பிரதிபலனாக எந்த விளையாட்டு விளையாண்டாலும் துரைக்கு ரொம்ப சலுகை தருவார்கள் சேத்தாளிப் பயல்கள்.
ஒருவன் தீனிகொண்டுவந்தால் அவனுக்கு அன்று விளையாட்டில் செல்லம் கொடுப்பது இந்த பயல்களின் ஜனநாயகம்.

 பொழுதுக்கும் சும்மாக்கிம் சும்மாக்கிம் வீட்டுக்குப் போறதும் ‘ஊரான் புள்ளிங்களுக்கு அள்ளி அள்ளி தானம் பண்ற்த்துக்கா’ என்று தரமறுக்கும் அம்மாவின் தடையை மீறி தீனி வாங்கி வருவதுமாகவும் சேத்தாளிகளோடு களிப்பதுமாகவே இருப்பான்.
மறுநாள் காலை, வெளிய துறுவுக்கு மாமாவை ஏரிக்கு கூட்டிக்கிட்டுப் போறதிலிருந்து டீ குடித்து கடையில் இட்லி தோசை சாப்பிடும் வரை அவ்வளவும் முடிந்ததும்தான் வில்லங்கமே ஆரம்பமானது துரைக்கு. பள்ளிக்கூடம் போகணுமே!

இதிலென்ன வில்லங்கமாம்?

பள்ளிக்கூடம் போய்விட்டு சாயங்காலம் வருவதற்குள் மாமா ஊருக்குப் போய்விட்டால் என்ன செய்வது. ஊருக்குப் போகும்போது அருகில் இருந்தால்தானே ‘ஊர்காசு’ கொடுத்துவிட்டுப் போவார். இல்லாவிட்டால் போச்சே. பள்ளிக்குத் தயாராகி வெளியே போகுமுன் டாடா சொல்றமாதிரி மாமாவைப் பார்த்தான். புரிந்துகொண்டவராய் ‘போய்ட்டு வா தொர, மாமா ரெண்டு நா கழிச்சித்தாம் போவேன், டாடா...’’ என்றார். பதிலுக்கு ‘கையசைத்து’ புறப்பட்டான் பூரித்த முகத்துடன். பள்ளிக்கூடத்தில் பசங்களுக்குக் கொடுக்க மறக்காமல் பையில் கொஞ்சம் தீனியும் எடுத்துக்கொண்டான்.
ஒருமுறை கொடுக்கிற காசை அவர் அடுத்ததடவை வரும்வரை வைத்திருப்பான். செலவுகூட செய்யமாட்டன். அம்மா தரும் சில்லரைகளைக் கொண்டு தீனி வாங்கித் திம்பான். சமயத்தில் நூறு ரூபாய்கூட தருவார். எங்கே போனாலும் கால்சட்டை பையிலேயே வைத்துக்கொண்டு திரிவான். அப்பப்போ பைக்குள் கைவிட்டு தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்வான். தூங்குக்மபோது கூட அப்படியேதான். ‘எனக்கு நூறுவா குடுத்துருக்காருங்கி எங்க மாம்மா’ என்பான் சேத்தாளிகளிடம். பிறகு புத்தகத்துக்கு நடுவே வைப்பான். விளையாட்டு மைதானத்திலிருந்து வீடு வரும்போதெல்லாம் புத்தகத்தை திறந்து ஊர்ஜிதப்படுத்திக்குவான், அம்மா எடுத்து வைத்துக்கொள்வாள் என்கிற பயம்தான்.

சமயத்தில் ‘இவ்ளோ பணத்தை என்னாப்பா செய்யப்போற, கொண்டா, நா வச்சிருக்கேன். நீ கேக்குறப்பல்லாம் அம்மா தாரேன்’ என வாங்கிக்கொண்டு ரெண்டு ரூவா துட்டை மட்டும் குடுப்பா. எவ்வளவோ கெஞ்சுவான், ஒண்ணும் நடக்காது. அதற்காகவே அம்மாவிடம் தரமாட்டான்.
பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது பக்கத்து வீட்டார் தென்பட்டால் ‘எங்கூட்ல மாமா இருக்கா’ எனக் கெட்டான். முக்கம் திரும்பும்போது வீட்டிற்கு வெளியே மாமா நிற்கிறாரா என்று பார்த்தான். வீட்டை நெருங்கும்போது மாமாவின் செருப்பு இருக்கிறதாவென நோட்டம் விட்டான். இல்லை.
‘சொரக்’ என்றது மனம்.
உள்ளே நுழைந்ததும் மாமாவின் சட்டையோ, பையோ இருக்கிறதாவென பார்த்தான், இல்லை. மாமா ஊருக்குப் போய்விட்டாரென்பது உறுதியாகிவிட்டது அவனுக்கு.

‘மாமா எங்கமா’ என்றான், ஏக்கமாக. ‘மாடு பார்த்துட்டு வர்ரேன்னு ‘தெரணி’ வரைக்கும் போயிருக்காருப்பா’ என்றாள் அம்மா. ‘மாமா தன்னிடம் கொடுத்துவிடச்சொல்லி காசு கொடுத்திருப்பார். அதை மறைக்கத்தான் அம்மா இப்படி சொல்கிறாள்’ என்று நினைத்தான்.
பொழுதும் இறங்கிவிட்டது.

இன்னும் ஆளைக் காணோம். ‘பதக்கு... பதக்கு’னு அடிச்சிக்கிது இவனுக்கு மனசு. விளையாட முடியல. வீட்டுக்கும் பஸ் ஸ்டாண்டுக்குமாவே பாய்ச்சலாக இருக்கான். ராத்திரி சோற்று நேரமும் முடிந்துவிட்டது. இன்னும் மாமா வரவில்லை. சோறுகூட சரியாக போகலை, துரைக்கு.
‘என்னம்மா இன்னங் காணம் மாமாவ, என்றான். ‘தெரணிலருந்தவாக்குல அவசரமா அப்படியே ஊருக்குப் போய்ட்டாராம்பா’ என்றாள். ‘போ. நீ பொய் சொல்ற’ என்றான். மூஞ்சை உம்முன்னு தூக்கி வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அப்பாவிடமும் பேசவில்லை. பிறகு திடீரென குறுக்கிக்கொண்டு படுத்துக்கொண்டான்.தூங்கிப் போய்விட்டான்.
விடிந்தது.

ஒரு மாதிரியாவேதான் இருந்தான். ‘நெசமாவே அப்படியேதான்டா போய்ட்டாரு. இல்லேன்னா உனக்கு ஊர்க்காசுகூட குடுக்காம போவாரா’ என்று எவ்வளவோ சொன்னாள் அம்மா.

எந்த பதிலும் சொல்லாமல் கம்முன்னே இருந்தான். காசு குடுன்னும் கேட்கலை. ‘நெசம்மா...’ என்றான். ‘ஆமாம்பா’ங்கிற மாதிரி தலையசைத்தாள். பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டான். ‘பாவம்டி புள்ள, மாமா குடுத்தாருன்னு பத்து ரூவாயைத்தான் குடேன், ஏங்கிப் போறான்ல’ என்றார் அப்பா.
மனசு கேட்காமல் ஐந்து ரூவா நோட்டை நீட்டி ‘இந்தா சாமி, தீனி வாங்கிக்க’ன்னாள் அம்மா. அவன் வாங்கவில்லை. பள்ளிக்கு நடையைக் கட்டினான்.

‘காசுக்காகத்தான் இப்படியிருக்கிறான்’ என்ற அவர்களின் கணக்கு தப்பாகிவிட்டது. அவனது மவுனமும் போக்கும் அப்போதைக்கு புரியவில்லை இருவருக்கும்.

தீனிகூட எடுக்காமல் போய்கொண்டிருந்தான்.



லோனு வாங்கலியோ லோனு - கிராமங்கள் பேசுகின்றன நூலிலிருந்து....

லோனு வாங்கலியோ லோனு
-----------------------------------------------------
- செங்கான் கார்முகில் 

வையமலை ஒரு வாய் செத்த ஆளு. இருப்பதைத் தின்றுவிட்டு பொட்டாட்டம் மொடக்கிக்குவார். விவரந்தெரிந்த நாள்தொட்டே அப்படித்தான். ஊரில் பெரிதாய் இவருக்கு மதிப்பில்லை. பலர் இவரை ஒரு ஆளாகவே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. 

பஞ்சாயத்துகள் நடக்கும்போது ஆளாளுக்கு குறுக்கிட்டுப் பேசுவார்கள். இவர் ஏதாவது சொன்னால் சட்டை செய்யமாட்டார்கள். அவமானமாய்ப் போனாலும் எதையும் நினைக்காமல் உட்கார்ந்துகொள்வார். சத்தமாய்ப் பேசி பொய்யையும் நிலை நிறுத்தும் மற்றவர்களைப்போல வாய் சமுத்தும் இல்லை.

ஊருக்குச் சேதிக்குப் புறப்பட்டுப் போகிறவர்கள், எதிரே வையமலை தென்பட்டால் ‘தோசி புடிச்சவன் வர்றான், விடிஞ்சாப்லதான்’ என்பார்கள். இப்படியெல்லாம் நினைக்கக் காரணம், குழந்தை குட்டிகளோடு ஓட்டைக் குடிசைக்குள் இருக்கிறார் என்பதோ, நிலையான வருமானமெதுவும் இல்லையென்பதோ, சொத்து சொகம் என்று கா காசும் இல்லையென்பதோவெல்லாம் இரண்டாம் பட்சம்தான். முதல்பட்சக் காரணம் _ பாவமான, தரித்திரம் பிடித்திருப்பது போன்ற தாடிதம்பட்டையுடனும், பைத்தியம் போன்ற எகனைமொகனையான உருவ அமைப்புடனும் இருப்பதுதான். முடியகிடிய வெட்டி நல்ல துணிமணிகளைப் போட்டுக்கொள்ளணுமென எந்த மனுசனுக்குத்தான் ஆசையிருக்காது. அவனவன் கஷ்டம் அவனவனுக்கு.

சரியானபடிக்கு வேலைவெட்டி கிடைக்காமல் சோத்துக்கே தாளம் போட்டுக்கிட்டிருந்த சூழ்நிலையில் ஒருநாள் வெளிய துறவுக்குப் போனயிடத்தில் நல்லதம்பி பெருசு சொன்னார்: “ஏ  வையமலை, லோனக்கீனப் போட்டு ஒரு மாடுகன்ன வாங்கி வளத்தீன்னா ஒரு செலவுக்காவுமில்ல. கஷ்டத்துல ரொம்ப நரங்குறியே’’
வையமலைக்கு ‘லோன்’ங்கிறதுன்னா என்னன்னே புரியாமல் முழிச்சிக்கிட்டே தலையைச் சொரிஞ்சார். இன்னமாரி இன்னமாரின்னு விவரம் சொல்லியனுப்பினார் நல்லதம்பி பெருசு.

அப்படியும் தேட்டை வராத வையமலை நேராக வீட்டுக்குப் போனார். பொண்டாட்டியைக் கூப்பிட்டு, “யாண்டி யாண்டி நல்லதம்பி பெரியப்பா சொன்னாரு’’ன்னு வெகரத்துப் பூராவுஞ் சொல்லி ‘எப்புடி ஓசணை’ இன்னார். வையமலைக்கு அவர் பொண்டாட்டி கொஞ்சூண்டு விவரக்காரி.
“சரி போய்யா. லோனு கெடைச்சி ஒரு பசுமாடு வாங்குனம்னா சொசைட்டிக்கி பாலு ஊத்தியே கடன அடைச்சிடலாம். கைல நாலு காசும் இருக்கும்’’ என்று தெம்பு கொடுத்தாள்.
அப்போவெல்லாம் லோனு வாங்குவதென்றால் அவ்வளவு லேசாயென்ன?
விருவிருவென நடந்தார் வையமலை, ஆளுங்கட்சியோட கிளைச் செயலாளர் வீட்டுக்கு. போனவர் வீட்டிற்கு உள்ளே போகக் கூச்சப்பட்டுக்கொண்டு வெளியிலேயே நின்றார். ஏதோ வேலையாக வெளியே கிளம்பிவந்த கிளைச் செயலாளர், ஓரமாய் கையொடுக்கி நின்றுகொண்டிருந்த வையமலையைக் கண்டதும் “என்னயா?’’ என்பதுமாதிரி தலையைச் சொடுக்கினார்.

ஒரு வழியாக விசயத்தை உளறி வைத்தார் வையமலை.
“சரிய்யா செஞ்சிக்கலாம். ரேஷன் காரடோட நாளக்கி வாவேன்’’ என்றுவிட்டு போய்விட்டார்.

அடுத்த நாள் போனார் வையமலை.

மடியிலிருந்த ரேஷன் கார்டை நீட்டினார். வாங்கிப் பார்த்த செயலாளர், “சரி. வையமலை மனு ஒண்ணு எழுதி குடுத்துடு, ஒன்றிய செயலாளருக்கு அனுப்பிடறேன். அப்புறம் அது மேல மேல போய்டும். இடையிலே போக்குவரத்துக்கும் பாக்க வேண்டியவனைப் பாத்து ‘வாக்கட்டு’ போடறதுக்கும் பாத்துக் குடுத்துடு. எனக்கு ஒரு நயா பைசாக்கூட வேணாம், தாய்ப் புள்ளைக்குள்ளெ’’ என்றார் பத்தரை மாதத்துத் தங்கமாட்டம். கையிலும் மடியிலும் எதுவுமில்லாத வையமலை, வீட்டிற்கு ஓடி பொண்டாட்டியைக் கூப்பிட்டு ‘எப்பிடி டி ஓசனை’ன்னார். கடைசியில் குடிக்கத் தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளும் குண்டாஞ்சோட்டு காசிபானையை அடகு வைக்க வேண்டியதாயிற்று.
‘கிளை’யிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு உத்தரவாதம் தந்து அனுப்பியது கிளை. தெம்பாக வீட்டிற்குப் போனார் வையமலை.
ஆச்சி... அந்தான் இந்தான் என்று ஒரு வாரம், பத்து நாட்களாச்சி, ஒண்ணையும் காணவில்லை. ‘கிளையை’ விசாரித்துவிட்டு வரலாமெனப் போய்க்கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்தார் கிளை.
“வா வையமலை, அவசரப்படாம இரு. ஒனக்கு மட்டும் ஓரியாட முடியுமா. பத்துபேர் சேந்தா பத்தோட பதினொன்னா அனுப்பிரலாம். செலவும் ஒரே செலவாப் போய்டும். அப்புறம் அது ஒன்றியம், எம்.எல்.ஏன்னு போவும், போ’’ என்றார்.

பின்னியும் ஒரு வாரமாகிவிட்டது.

நல்லத்தம்பி பெருசைப் பார்த்து ‘கிளை’ சொன்னதை அப்படியே சொன்னார் வையமலை. விசயம் புரிந்த பெருசு மடியிலிருந்த ஒரு தொகையை வையமலையிடம் கொடுத்து “போய் குடு, கிடைச்சுடும். வச்சிக்கிட்டு நல்லாயிரு, போ’’ என்று அனுப்பிவைத்தார்.

அன்று சாயங்காலமே அதையும் கொடுத்துவிட்டு வந்தார் வையமலை. பொண்டாட்டியிடம் விவரத்தைச் சொன்னார். “கெடைச்சிடும்யா. ஆரத்தியெல்லாம் எடுத்தம். நம்ம எம்.எல்.ஏ. நல்ல மவராசன், தட்டுல நூறுருவா போட்டு, எது வேணும்னாலும் கேளும்மான்னு கால்ல விழுந்து சொன்னாரே. மூணு மாசத்துக்குள்ளாரயேவா மறந்துருப்பாரு’’ அப்பாவித்தனமாகச் சொன்னாள் அவள்.

“எல்லாம் முடிஞ்சிப்போச்சி. எதுக்கும் முடிஞ்சா ஒன்றியத்தப் பாத்து ஒரு வார்த்தை கேட்டுடு வையமல, அவுரு பாத்துச் சொல்றதுதானே’’ என்றார் கிளை. அது சொன்னதுமாதிரியே மறுநாள் ஏழெட்டு மைல் நடந்தே போனார் வையமலை. ஒன்றியம் வீட்டிற்குப் போனதும், “இப்பத்தான் யூனியனுக்குப் போனார்’’ என்றார்கள். அங்கிருந்து யூனியனுக்குப் போனால், “இப்பத்தான் மாவட்டத்தப் பாக்கப் போனார்’’ என்றார்கள்.
அப்படி இப்படியென ஆறேழு நாட்களாக நடையாக நடந்து ஒன்றியத்தைப் பார்த்தும்விட்டார் வையமலை. “எப்படியாவது லோனு கெடைச்சா, ஒரு பசுமாட்டப் புடிச்சிப் பொழைச்சிக்கலாம்’’ என்று நினைத்த வையமலை உணர்ச்சி வசப்பட்டு ஒன்றியம் காலில் விழுந்துவிட்டார். ஒன்றியத்திற்குப் பாவமாய்ப் போய்விட்டது. தூக்கிவிட்டு, உதவியாளரிடம் “இவுரு பேர எழுதிக்க’’ என்றார்.

ஆச்சி ஒரு மாசம், ஒன்றரை மாசம், ரெண்டும் மாசமும் ஆச்சி _ ஒரு வழியாக லோனும் கிடைத்துப் பணமும் வாங்கினார். வையமலைக்கும் பொஞ்சாதிக்கும் அப்படியொரு சந்தோஷம்.
“என்னப்பா ஆச்சி. லோனுகீனுன்ன. பணத்தைக் காணம்’’ என்று நச்சரித் அடகுக்காரர்களும், கைமாத்துகளும், வட்டிக்காரர்களும் நினைவுக்கு வர, தொல்லை பொறுக்காமல் லோன் பணத்திலிருந்து எடுத்து எடுத்துக் கொடுத்தார் வையமலை. ஒரு வழியாய்க் கடனெல்லாம் முடிந்தது. அப்பாடாவெனப் பெருமூச்சுவிட்டு உட்கார்ந்த வையமலை அடுக்குப்பானையின் மேலேயிருந்த கலயத்தை எடுத்துவரச் சொன்னார் பொண்டாட்டியை.

எண்ணிப் பார்த்தார். இரண்டாயிரம் கூட இல்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை.

“கடனஒடன வாங்கலாம்னா யாரு கொடுக்கப் போறா. இவன்ட்ட குடுத்தா எப்ப திரும்புமோன்னு செம்மத்துக்கும் தரமாட்டாங்க. ஏதோ லோனு வரும்னதும்தான் நாலுகாசு பொரண்டது, அதே பெருசு. இல்லாட்டி எவென் நம்மலெ மதிக்கப் போறான். பாலு கரந்து தர்றேன்னு சொன்னா, மாடு எப்ப வர்றது காசு எப்பத் தர்றதுங்கிறானுவ’’ புலம்பல் மேல் புலம்பல் வையமலைக்கு. பேசாமல் இருந்துவிட்டார்.

சோத்துக்கு, அதுக்கு இதுக்கென்று காசும்  கரைந்துகொண்டே வந்தது.
ஒருநாள் நடுத்தெரு சின்னையன் மகன் _ வையமலை வீட்டை நோக்கி ஓடி வந்தான். “ஆபிசரு வந்துருக்காங்க. லோனு மாட்டுக்கு தோடு (சிகிலு) போடணுமாம். மாட்டை ஓட்டியாரச் சொன்னாங்க’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

வையமலைக்குக் காலும் ஓடவில்லை, கையும் ஓடவில்லை. மாடு இன்னும் பிடிக்கவில்லையே. ஆபிசர் மேலிருந்த பயம் உடம்பெல்லாம் லேசாக நடுங்கியது. நம்மாள்களுக்கு முழுக்கால் சட்டைக்காரன்கிட்ட பேசுவதென்றாலே பயம், இதில் வந்திருப்பவர் ஆபீசர் வேறு சொல்லவேண்டுமா? கதவாயிருந்த படலைச் சாத்திவிட்டு யார் கண்ணிலும் படாமல் காட்டுப்பக்கம் ஓடிவிட்டார் வையமலை. சாமம் வரைக்கும் வரவே இல்லை. இனம் புரியாத ஆத்திரம் வேறு வந்தது. அன்றைக்கு அத்தோடு போனது.

அடுத்த வாரமும் ஆபீசர் வந்தார், விடுபட்ட மாடுகளுக்குச் சிகிலு போட . இந்தத் தடவை ஓடவில்லை. நல்லதம்பி பெருசு சொன்னபடி, கொழுத்த பசுவை ஓட்டி வந்து நிறுத்தினார். மாட்டைப் பார்த்ததும் ஆபிசருக்கும் கிளைக்கும் சந்தோசமாகிவிட்டது.

சிகிலு அடித்துவிட்டுப் போனார்கள். அவ்வளவுதான். இப்படி சிகிலு அடித்துவிட்டுப் போனவர்கள் என்றைக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள். ஒருவழியாக வையமலை நிம்மதியடைந்தார்.

அவர்கள் போய் அரைமணி நேரத்தில் நல்லதம்பி பெருசு அங்கே வந்தார். சிகில் போட மாடு கொடுத்ததற்காக இருநூறு ரூபாயை வையமலை நீட்டினார். ‘எதுக்குப்பா நமக்குள்ள’ என மறுத்துவிட்டு தன் மாட்டை ஓட்டிக்கொண்டு நடந்தார் நல்லதம்பி. 

சும்மா அப்படியே நின்றார் வையமலை.

கவிதை - கவிதை எழுதுபவன்

கவிதை எழுதுபவன்
-------------------------------
செங்கான் கார்முகில்

அலுவலகத்திற்குப்
போகும்போதெல்லாம் பார்க்கிறேன்
அந்தத் தெருக்கூட்டும்
துப்புரவுத் தொழிலாளியை.
இண்டு இடுக்குகளிலெல்லாம்
துடைப்பத்தை விட்டு
வழித்து எடுத்துவிடுகிறான்
குப்பையை.
முக்கியமான விசயம்:
புழுதி பறக்காமலும்
வருவோர் போவோர்மீது
குப்பை சிதறாமலும்
கூட்டுவான்.
திரட்டிய குப்பையை
சிதறாமல்
அள்ளிக்கொட்டுவான்.
போக்குவரத்தையே
தேக்குவதுபோல
குப்பைத்தொட்டி
பாதி ரோட்டிலிருந்தால்
ஓரமாகத் தள்ளிவைப்பான்.

அவனிடம்
பேசவேண்டும்போல் தோன்றியது:

இளைஞனாகவும்
யதார்த்தனாகவும் தெரிந்ததால்
அனுகுவதில் பிரச்சனை இல்லைதான்.


'என்னதான் அரசு வேலையானாலும்
சலுகைகள் இருந்தாலும்
எல்லா இனமும்
இந்த வேலைக்கு வருவதில்லை.
குழந்தைகள்,நாய்க்குட்டிகளின்
கழிவுகளையும்கூட
போட்டுவிடுகிறார்கள்.
அவசரகதிக்கு
சிறுநீர்கழித்தும் வைக்கிறார்கள்.
வாடைவேறு
குடலைப்புடுங்கும்.
தினமும் இதையெல்லாம்
எப்படி சகித்துக்கொள்கிறீர்கள்.
அருவருப்போ
சலிப்போ
கோபமோ இல்லையா...
எப்படி இவ்வளவு
நேர்த்தியாகச் செய்கிறீர்கள்...'
என்றேன்.
அவர் சொன்னார்:
'கவிதை எழுதுகிறவன் சார்
நான்..'

கவிதை - காக்கைப் பொழுதுகள்

காக்கைப் பொழுதுகள்
-----------------------------------
செங்கான் கார்முகில்


இந்த இரண்டு மாதங்களாக
தனியாகவும் கூட்டாகவும்
என்னைநோக்கி வந்துகொண்டே
இருக்கின்றன காக்கைகள்.
தோளில் அமர வருவதுபோலவும்
எம்மிடமிருந்து எதையோ பெறுவதுபோலவும்
அரவமற்று நீந்தி வருகின்றன.
இதோ வந்துவிட்டேன் என்பதைப்போல
பின்னிருந்து முந்திப்போய்
எதிர்படும் சுற்றுச்சுவரிலோ
தொட்டிக் கங்கிலோ
அமர்ந்துகொண்டு பார்க்கின்றன.
இப்படியெல்லாம் தென்படாத வேளையில்
ஏதேனுமொரு மரத்திலிருந்தோ
மறைவிடத்திலிருந்தோ
குரல் கொடுக்கின்றன.
எதேனுமொரு யோசிப்பில்
நடந்துகொண்டிருக்கும் தருணங்களில்
முகத்திற்கு வெகு அருகாமையில்
விசிறியபடி குறுக்கிட்டும் போகின்றன.
மரத்தடிகளில் அமர நேர்ந்தால்
மிக உரிமையாக எச்சமிட்டுவிட்டு
அமைதியாக உட்கார்ந்திருக்கின்றன.
மூன்று தினங்களுக்கு முன்
பெய்த மழையின்போது
நான்கைந்து காக்கைகள்
தாழ்வாரத்தை கிளையாக்கிக்கொண்டன.
ஒரு மனிதன் அருகில் இருக்கிறான்
என்ற எண்ணம் கிஞ்சிற்றுமற்று
மாடியில் தேங்கிநின்ற மழையை
தரைமட்டமாக அலகு சாய்த்து
உண்ணுகிறதொரு காக்கை.
நாள்முழுக்க வராதுபோன நேற்று
கனவில் வந்து கரைந்து தள்ளிவிட்டன.

என்னடா இதுவென்றோ
ஏன் இப்படியென்றோ
யோசித்ததுமில்லை

காக்கையோ குருவியோ
வேறெந்த ஜீவராசிகளுமோ
ஒரு மனிதனை நோக்கி
வராமல் போனால்தானே
யோசிக்கவேண்டும்!

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

கவிதை - கேட்காதீர்கள்

கேட்காதீர்கள் 

மாநகராட்சியினர் ஏதேனும்
பள்ளங்கள் தோண்டி வைத்திருக்கலாம்
சாக்கடைச் சுரங்கம் திறந்து கிடக்கலாம்
குப்பை லாறிகளின் கழிசல் கிடக்கலாம்
கட்டிட கான்ட்ராக்டர்கள்
மிச்சம் மீதிகளை விட்டுப்போயிருக்கலாம்
நாய்க் கழிவுகள் இருக்கலாம்
பிச்சைக்காரர்கள் படுத்துக்கிடக்கலாம்
போதைத் தோழர்கள் தள்ளாடி வரலாம்
போக்கிடமற்றவர்கள்
ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போயிருக்கலாம்

ஆகவே நான்
தரையைப் பார்த்தபடியேதான்
வருகிறேன் பெரும்பாலும்.

அந்த நட்சத்திரக் கட்டிடத்தைப் பார்த்தீரா
கோட்டைபோன்ற அந்த வீட்டைப் பார்த்தீரா
உலகப்புகழ்பெற்ற அந்த நிறுவனத்தைப் பார்த்தீரா
அந்த அதிகாரியின் தோட்டத்தைப் பார்த்தீரா
அதைப் பார்த்தீரா,இதைப் பார்த்தீரா
என்றெல்லாம் கேட்காதீர்கள்...

நான் நடந்து வருகிறேன்!!

முதல் புத்தகம்


கவிதை -காக்கைப் பொழுதுகள்


காக்கைப் பொழுதுகள்
-----------------------------------
இந்த இரண்டு மாதங்களாக
தனியாகவும் கூட்டாகவும்
காக்கைகள்
என்னைநோக்கி வந்துகொண்டே
இருக்கின்றன
தோளில் அமர வருவதுபோலவும்
எதையோ பெறுவதுபோலவும்
அரவமற்று நீந்தி வருகின்றன
இதோ வந்துவிட்டேன் என்பதைப்போல
பின்னிருந்து முந்திப்போய்
எதிர்படும் சுற்றுச்சுவற்றிலோ
தொட்டிக் கங்கிலோ
அமர்ந்துகொண்டு பார்க்கின்றன.
இப்படியெல்லாம் தென்படாத வேளையில்
ஏதேனுமொரு மரத்திலிருந்தோ
மறைவிடத்திலிருந்தோ
குரல் கொடுக்கின்றன
எதேனுமொரு யோசிப்பில்
நடந்துகொண்டிருக்கும் தருணங்களில்
முகத்திற்கு வெகு அருகாமையில்
விசிறியபடி குறுக்கிட்டும் போகின்றன
மரத்தடிகளில் அமர நேர்ந்தால்
மிக உரிமையாக எச்சமிட்டுவிட்டு
அமைதியாக உட்கார்ந்திருக்கின்றன.
மூன்று தினங்களுக்கு
முன் பெய்தமழையின்போது
நான்கைந்து காக்கைகள்
தாழ்வாரத்தை கிளையாக்கிக்கொண்டன.
ஒரு மனிதன் அருகில் இருக்கிறான்
என்ற எண்ணம் கிஞ்சிற்றுமற்று
மாடியில் தேங்கிநின்ற மழையை
தரைமட்டமாக அலகு சாய்த்து
உண்ணுகிறதொரு காக்கை.
நாள்முழுக்க வராதுபோன நேற்று
கனவில் வந்து கரைந்துதள்ளிவிட்டன.

என்னடா இதுவென்றோ
ஏன் இப்படியென்றோ
யோசித்ததுமில்லை

காக்கையோ
குருவியோ
வேறெந்த ஜீவராசிகளுமோ
ஒரு மனிதனை நோக்கி
வராமல் போனால்தானே
யோசிக்கவேண்டும்!!!

கவிதை - அந்தச் சிறுமி

அந்தச் சிறுமி
------------------------------

ரெண்டாவது தடவை
தீனி தர மறுத்திருப்பாளா அம்மா

அப்பா ஏதேனும் சிடைத்திருப்பாரா

ஏதேனுமொரு செல்லச் சண்டையில்
தனக்கு யாரும் ஆதரவளிக்கவில்லையா

தன் நண்பர்களுக்கு இருப்பதுபோன்று
நல்ல துணிகளோ, தோடு ஜிமிக்கிகளோ
கேட்டு... மறுத்துவிட்டார்களா

அம்மா சோறாக்கும்வரை
பொறுத்திருக்கமுடியாமல்
ஆயா வீட்டுக்குப் போகிறாளா

சும்மா சும்மா
கடைக்குப் போகச்சொல்கிறார்களா

அம்மாவை அப்பா அடித்துவிட்டாரா

விளையாடிக்கொண்டிருந்த இடத்தில்
நட்புகளில் யாரேனும் அடித்துவிட்டார்களா

விளையாட்டுக்கு சேர்த்துக்கொள்ளவில்லையா

இன்னும் இரண்டு நாட்கள்
இருப்பார்கள் என்று எதிர்பார்த்த
தாத்தாவோ பாட்டியோ மாமாவோ
ஏதேனும் பொய் சொல்லிவிட்டு
போய்விட்டார்களா

பந்தி நடக்கும் விருந்துவீட்டைக்
கடந்து வருகையில்
ஒருவரும் சாப்பிடச் சொல்லவில்லையா
தாயில்லா பிள்ளையா

சித்தி ஏதேனும் ஓரவஞ்சனை
செய்திருப்பாளா

காய்ச்சலா...

பாலியல் தொல்லை நேர்ந்திருக்குமா

ஆசிரியரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து
பள்ளிக்கூடம் போகப்பிடிக்கவில்லையா

ஏன்டா ஒரு மாதிரியா இருக்கேன்னு
ஒருத்தரும் கேட்கவில்லையா

காரணம் இன்னதென்று தெரியாதபோதும்
மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது

முந்தா நாள் மதியம்
யாருமற்ற வீதியில்
தனியாக அழுதுகொண்டே போன

சிறுமியின் முகம்.

புகைப்படம்

sengkhan karmugil

புகைப்படங்கள்

எனது எழுத்து மேசை 


புகைப்படங்கள்


எனது  அலுவக மாடி 

புகைப்படங்கள்

எமது  அலுவலகம் ...




ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

வியாழன், 12 பிப்ரவரி, 2015