வியாழன், 29 அக்டோபர், 2015

லோனு வாங்கலியோ லோனு - கிராமங்கள் பேசுகின்றன நூலிலிருந்து....

லோனு வாங்கலியோ லோனு
-----------------------------------------------------
- செங்கான் கார்முகில் 

வையமலை ஒரு வாய் செத்த ஆளு. இருப்பதைத் தின்றுவிட்டு பொட்டாட்டம் மொடக்கிக்குவார். விவரந்தெரிந்த நாள்தொட்டே அப்படித்தான். ஊரில் பெரிதாய் இவருக்கு மதிப்பில்லை. பலர் இவரை ஒரு ஆளாகவே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. 

பஞ்சாயத்துகள் நடக்கும்போது ஆளாளுக்கு குறுக்கிட்டுப் பேசுவார்கள். இவர் ஏதாவது சொன்னால் சட்டை செய்யமாட்டார்கள். அவமானமாய்ப் போனாலும் எதையும் நினைக்காமல் உட்கார்ந்துகொள்வார். சத்தமாய்ப் பேசி பொய்யையும் நிலை நிறுத்தும் மற்றவர்களைப்போல வாய் சமுத்தும் இல்லை.

ஊருக்குச் சேதிக்குப் புறப்பட்டுப் போகிறவர்கள், எதிரே வையமலை தென்பட்டால் ‘தோசி புடிச்சவன் வர்றான், விடிஞ்சாப்லதான்’ என்பார்கள். இப்படியெல்லாம் நினைக்கக் காரணம், குழந்தை குட்டிகளோடு ஓட்டைக் குடிசைக்குள் இருக்கிறார் என்பதோ, நிலையான வருமானமெதுவும் இல்லையென்பதோ, சொத்து சொகம் என்று கா காசும் இல்லையென்பதோவெல்லாம் இரண்டாம் பட்சம்தான். முதல்பட்சக் காரணம் _ பாவமான, தரித்திரம் பிடித்திருப்பது போன்ற தாடிதம்பட்டையுடனும், பைத்தியம் போன்ற எகனைமொகனையான உருவ அமைப்புடனும் இருப்பதுதான். முடியகிடிய வெட்டி நல்ல துணிமணிகளைப் போட்டுக்கொள்ளணுமென எந்த மனுசனுக்குத்தான் ஆசையிருக்காது. அவனவன் கஷ்டம் அவனவனுக்கு.

சரியானபடிக்கு வேலைவெட்டி கிடைக்காமல் சோத்துக்கே தாளம் போட்டுக்கிட்டிருந்த சூழ்நிலையில் ஒருநாள் வெளிய துறவுக்குப் போனயிடத்தில் நல்லதம்பி பெருசு சொன்னார்: “ஏ  வையமலை, லோனக்கீனப் போட்டு ஒரு மாடுகன்ன வாங்கி வளத்தீன்னா ஒரு செலவுக்காவுமில்ல. கஷ்டத்துல ரொம்ப நரங்குறியே’’
வையமலைக்கு ‘லோன்’ங்கிறதுன்னா என்னன்னே புரியாமல் முழிச்சிக்கிட்டே தலையைச் சொரிஞ்சார். இன்னமாரி இன்னமாரின்னு விவரம் சொல்லியனுப்பினார் நல்லதம்பி பெருசு.

அப்படியும் தேட்டை வராத வையமலை நேராக வீட்டுக்குப் போனார். பொண்டாட்டியைக் கூப்பிட்டு, “யாண்டி யாண்டி நல்லதம்பி பெரியப்பா சொன்னாரு’’ன்னு வெகரத்துப் பூராவுஞ் சொல்லி ‘எப்புடி ஓசணை’ இன்னார். வையமலைக்கு அவர் பொண்டாட்டி கொஞ்சூண்டு விவரக்காரி.
“சரி போய்யா. லோனு கெடைச்சி ஒரு பசுமாடு வாங்குனம்னா சொசைட்டிக்கி பாலு ஊத்தியே கடன அடைச்சிடலாம். கைல நாலு காசும் இருக்கும்’’ என்று தெம்பு கொடுத்தாள்.
அப்போவெல்லாம் லோனு வாங்குவதென்றால் அவ்வளவு லேசாயென்ன?
விருவிருவென நடந்தார் வையமலை, ஆளுங்கட்சியோட கிளைச் செயலாளர் வீட்டுக்கு. போனவர் வீட்டிற்கு உள்ளே போகக் கூச்சப்பட்டுக்கொண்டு வெளியிலேயே நின்றார். ஏதோ வேலையாக வெளியே கிளம்பிவந்த கிளைச் செயலாளர், ஓரமாய் கையொடுக்கி நின்றுகொண்டிருந்த வையமலையைக் கண்டதும் “என்னயா?’’ என்பதுமாதிரி தலையைச் சொடுக்கினார்.

ஒரு வழியாக விசயத்தை உளறி வைத்தார் வையமலை.
“சரிய்யா செஞ்சிக்கலாம். ரேஷன் காரடோட நாளக்கி வாவேன்’’ என்றுவிட்டு போய்விட்டார்.

அடுத்த நாள் போனார் வையமலை.

மடியிலிருந்த ரேஷன் கார்டை நீட்டினார். வாங்கிப் பார்த்த செயலாளர், “சரி. வையமலை மனு ஒண்ணு எழுதி குடுத்துடு, ஒன்றிய செயலாளருக்கு அனுப்பிடறேன். அப்புறம் அது மேல மேல போய்டும். இடையிலே போக்குவரத்துக்கும் பாக்க வேண்டியவனைப் பாத்து ‘வாக்கட்டு’ போடறதுக்கும் பாத்துக் குடுத்துடு. எனக்கு ஒரு நயா பைசாக்கூட வேணாம், தாய்ப் புள்ளைக்குள்ளெ’’ என்றார் பத்தரை மாதத்துத் தங்கமாட்டம். கையிலும் மடியிலும் எதுவுமில்லாத வையமலை, வீட்டிற்கு ஓடி பொண்டாட்டியைக் கூப்பிட்டு ‘எப்பிடி டி ஓசனை’ன்னார். கடைசியில் குடிக்கத் தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளும் குண்டாஞ்சோட்டு காசிபானையை அடகு வைக்க வேண்டியதாயிற்று.
‘கிளை’யிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு உத்தரவாதம் தந்து அனுப்பியது கிளை. தெம்பாக வீட்டிற்குப் போனார் வையமலை.
ஆச்சி... அந்தான் இந்தான் என்று ஒரு வாரம், பத்து நாட்களாச்சி, ஒண்ணையும் காணவில்லை. ‘கிளையை’ விசாரித்துவிட்டு வரலாமெனப் போய்க்கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்தார் கிளை.
“வா வையமலை, அவசரப்படாம இரு. ஒனக்கு மட்டும் ஓரியாட முடியுமா. பத்துபேர் சேந்தா பத்தோட பதினொன்னா அனுப்பிரலாம். செலவும் ஒரே செலவாப் போய்டும். அப்புறம் அது ஒன்றியம், எம்.எல்.ஏன்னு போவும், போ’’ என்றார்.

பின்னியும் ஒரு வாரமாகிவிட்டது.

நல்லத்தம்பி பெருசைப் பார்த்து ‘கிளை’ சொன்னதை அப்படியே சொன்னார் வையமலை. விசயம் புரிந்த பெருசு மடியிலிருந்த ஒரு தொகையை வையமலையிடம் கொடுத்து “போய் குடு, கிடைச்சுடும். வச்சிக்கிட்டு நல்லாயிரு, போ’’ என்று அனுப்பிவைத்தார்.

அன்று சாயங்காலமே அதையும் கொடுத்துவிட்டு வந்தார் வையமலை. பொண்டாட்டியிடம் விவரத்தைச் சொன்னார். “கெடைச்சிடும்யா. ஆரத்தியெல்லாம் எடுத்தம். நம்ம எம்.எல்.ஏ. நல்ல மவராசன், தட்டுல நூறுருவா போட்டு, எது வேணும்னாலும் கேளும்மான்னு கால்ல விழுந்து சொன்னாரே. மூணு மாசத்துக்குள்ளாரயேவா மறந்துருப்பாரு’’ அப்பாவித்தனமாகச் சொன்னாள் அவள்.

“எல்லாம் முடிஞ்சிப்போச்சி. எதுக்கும் முடிஞ்சா ஒன்றியத்தப் பாத்து ஒரு வார்த்தை கேட்டுடு வையமல, அவுரு பாத்துச் சொல்றதுதானே’’ என்றார் கிளை. அது சொன்னதுமாதிரியே மறுநாள் ஏழெட்டு மைல் நடந்தே போனார் வையமலை. ஒன்றியம் வீட்டிற்குப் போனதும், “இப்பத்தான் யூனியனுக்குப் போனார்’’ என்றார்கள். அங்கிருந்து யூனியனுக்குப் போனால், “இப்பத்தான் மாவட்டத்தப் பாக்கப் போனார்’’ என்றார்கள்.
அப்படி இப்படியென ஆறேழு நாட்களாக நடையாக நடந்து ஒன்றியத்தைப் பார்த்தும்விட்டார் வையமலை. “எப்படியாவது லோனு கெடைச்சா, ஒரு பசுமாட்டப் புடிச்சிப் பொழைச்சிக்கலாம்’’ என்று நினைத்த வையமலை உணர்ச்சி வசப்பட்டு ஒன்றியம் காலில் விழுந்துவிட்டார். ஒன்றியத்திற்குப் பாவமாய்ப் போய்விட்டது. தூக்கிவிட்டு, உதவியாளரிடம் “இவுரு பேர எழுதிக்க’’ என்றார்.

ஆச்சி ஒரு மாசம், ஒன்றரை மாசம், ரெண்டும் மாசமும் ஆச்சி _ ஒரு வழியாக லோனும் கிடைத்துப் பணமும் வாங்கினார். வையமலைக்கும் பொஞ்சாதிக்கும் அப்படியொரு சந்தோஷம்.
“என்னப்பா ஆச்சி. லோனுகீனுன்ன. பணத்தைக் காணம்’’ என்று நச்சரித் அடகுக்காரர்களும், கைமாத்துகளும், வட்டிக்காரர்களும் நினைவுக்கு வர, தொல்லை பொறுக்காமல் லோன் பணத்திலிருந்து எடுத்து எடுத்துக் கொடுத்தார் வையமலை. ஒரு வழியாய்க் கடனெல்லாம் முடிந்தது. அப்பாடாவெனப் பெருமூச்சுவிட்டு உட்கார்ந்த வையமலை அடுக்குப்பானையின் மேலேயிருந்த கலயத்தை எடுத்துவரச் சொன்னார் பொண்டாட்டியை.

எண்ணிப் பார்த்தார். இரண்டாயிரம் கூட இல்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை.

“கடனஒடன வாங்கலாம்னா யாரு கொடுக்கப் போறா. இவன்ட்ட குடுத்தா எப்ப திரும்புமோன்னு செம்மத்துக்கும் தரமாட்டாங்க. ஏதோ லோனு வரும்னதும்தான் நாலுகாசு பொரண்டது, அதே பெருசு. இல்லாட்டி எவென் நம்மலெ மதிக்கப் போறான். பாலு கரந்து தர்றேன்னு சொன்னா, மாடு எப்ப வர்றது காசு எப்பத் தர்றதுங்கிறானுவ’’ புலம்பல் மேல் புலம்பல் வையமலைக்கு. பேசாமல் இருந்துவிட்டார்.

சோத்துக்கு, அதுக்கு இதுக்கென்று காசும்  கரைந்துகொண்டே வந்தது.
ஒருநாள் நடுத்தெரு சின்னையன் மகன் _ வையமலை வீட்டை நோக்கி ஓடி வந்தான். “ஆபிசரு வந்துருக்காங்க. லோனு மாட்டுக்கு தோடு (சிகிலு) போடணுமாம். மாட்டை ஓட்டியாரச் சொன்னாங்க’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

வையமலைக்குக் காலும் ஓடவில்லை, கையும் ஓடவில்லை. மாடு இன்னும் பிடிக்கவில்லையே. ஆபிசர் மேலிருந்த பயம் உடம்பெல்லாம் லேசாக நடுங்கியது. நம்மாள்களுக்கு முழுக்கால் சட்டைக்காரன்கிட்ட பேசுவதென்றாலே பயம், இதில் வந்திருப்பவர் ஆபீசர் வேறு சொல்லவேண்டுமா? கதவாயிருந்த படலைச் சாத்திவிட்டு யார் கண்ணிலும் படாமல் காட்டுப்பக்கம் ஓடிவிட்டார் வையமலை. சாமம் வரைக்கும் வரவே இல்லை. இனம் புரியாத ஆத்திரம் வேறு வந்தது. அன்றைக்கு அத்தோடு போனது.

அடுத்த வாரமும் ஆபீசர் வந்தார், விடுபட்ட மாடுகளுக்குச் சிகிலு போட . இந்தத் தடவை ஓடவில்லை. நல்லதம்பி பெருசு சொன்னபடி, கொழுத்த பசுவை ஓட்டி வந்து நிறுத்தினார். மாட்டைப் பார்த்ததும் ஆபிசருக்கும் கிளைக்கும் சந்தோசமாகிவிட்டது.

சிகிலு அடித்துவிட்டுப் போனார்கள். அவ்வளவுதான். இப்படி சிகிலு அடித்துவிட்டுப் போனவர்கள் என்றைக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள். ஒருவழியாக வையமலை நிம்மதியடைந்தார்.

அவர்கள் போய் அரைமணி நேரத்தில் நல்லதம்பி பெருசு அங்கே வந்தார். சிகில் போட மாடு கொடுத்ததற்காக இருநூறு ரூபாயை வையமலை நீட்டினார். ‘எதுக்குப்பா நமக்குள்ள’ என மறுத்துவிட்டு தன் மாட்டை ஓட்டிக்கொண்டு நடந்தார் நல்லதம்பி. 

சும்மா அப்படியே நின்றார் வையமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக