வியாழன், 29 அக்டோபர், 2015

கவிதை - கவிதை எழுதுபவன்

கவிதை எழுதுபவன்
-------------------------------
செங்கான் கார்முகில்

அலுவலகத்திற்குப்
போகும்போதெல்லாம் பார்க்கிறேன்
அந்தத் தெருக்கூட்டும்
துப்புரவுத் தொழிலாளியை.
இண்டு இடுக்குகளிலெல்லாம்
துடைப்பத்தை விட்டு
வழித்து எடுத்துவிடுகிறான்
குப்பையை.
முக்கியமான விசயம்:
புழுதி பறக்காமலும்
வருவோர் போவோர்மீது
குப்பை சிதறாமலும்
கூட்டுவான்.
திரட்டிய குப்பையை
சிதறாமல்
அள்ளிக்கொட்டுவான்.
போக்குவரத்தையே
தேக்குவதுபோல
குப்பைத்தொட்டி
பாதி ரோட்டிலிருந்தால்
ஓரமாகத் தள்ளிவைப்பான்.

அவனிடம்
பேசவேண்டும்போல் தோன்றியது:

இளைஞனாகவும்
யதார்த்தனாகவும் தெரிந்ததால்
அனுகுவதில் பிரச்சனை இல்லைதான்.


'என்னதான் அரசு வேலையானாலும்
சலுகைகள் இருந்தாலும்
எல்லா இனமும்
இந்த வேலைக்கு வருவதில்லை.
குழந்தைகள்,நாய்க்குட்டிகளின்
கழிவுகளையும்கூட
போட்டுவிடுகிறார்கள்.
அவசரகதிக்கு
சிறுநீர்கழித்தும் வைக்கிறார்கள்.
வாடைவேறு
குடலைப்புடுங்கும்.
தினமும் இதையெல்லாம்
எப்படி சகித்துக்கொள்கிறீர்கள்.
அருவருப்போ
சலிப்போ
கோபமோ இல்லையா...
எப்படி இவ்வளவு
நேர்த்தியாகச் செய்கிறீர்கள்...'
என்றேன்.
அவர் சொன்னார்:
'கவிதை எழுதுகிறவன் சார்
நான்..'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக