சிறுகதை - ஊர் காசு
--------------------------------------
- செங்கான் கார்முகில்
எந்த விளையாட்டில் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் ஒவ்வொரு பேருந்து வரும்போதும் பேருந்து நிலையத்திற்கு ஓடி வந்துவிடுகிறான் செல்லதுரை.
இன்று காலையிலிருந்தே அப்படித்தான் இருக்கிறான். நேற்று சாயங்காலம், கூரை மேலிருந்து காக்கை கரைந்தபோது, “காக்கா கத்திக்கிட்டே இருக்கு. விருந்துகிருந்து வருதோ என்னமோ’’ என்று அவன் அம்மா முனகிக்கொண்டதுதான் காரணம்.
அவன் அம்மாவைப் பொறுத்தவரை வரப்போகிற விருந்தாளி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் செல்லதுரைக்கு விருந்தாளி என்றால் அவன் மாமா ஞாபகம்தான் வரும். மாமா என்றால் அவனுக்கு அம்புட்டு இஷ்டம். பொட்டு காத்துகூடப் புகமுடியாதபடி இறுக்...கிப் போர்த்திக்கிட்டாலும் போர்வைமேல் குந்திக்கிட்டு போகவேமாட்டேன்னு இருக்கிற கொசுவுமாதிரி மாமாவோடேயே ஒட்டிக்கிட்டுத் திரிவான்.
அதுக்குக் காரணம் ரெண்டு.
ஒண்ணு, அவர் வாங்கிவரும் தீனிசாமான்கள். இன்னொன்னு, ஊருக்குத் திரும்பிப் போகும்போது அவர் கொடுத்துவிட்டுப் போகும் காசு. ஊருக்குப் போகும்போது தருவதால் அதுக்கு ‘ஊர் காசு’ன்னு பேரு.
கடைகண்ணிக்குப் போகும்போது தோளில் அவனை உட்கார வைத்துக்கொள்வது, மல்லாக்கப் படுத்துக்கிட்டு வயிற்றுமேல அவனை குந்தவைத்துக்கொண்டு கேள்வி கேட்பது அல்லது அவன் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்வது, ராத்திரியில் அவன் தூங்கறவரைக்கும் கதை சொல்வது, விடியற்காலையில் டீ கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் மேசைமேல் உட்காரவைத்து ‘வட்டாசெட்’டில் டீ வாங்கி ஆற்றி ஆற்றி பருக்குவது அல்லது டீயில் நனைத்த பன்னை ஊட்டிவிடுவது, கிழிந்த புத்தகத்தைக் கோந்துபோட்டு ஒட்டித் தருவது, ‘இந்த வருசஷம் பாஸ் பண்ணிப் புட்டினா ஒனக்கு பேண்டு சட்டை எடுத்துத் தாரேன், பொட்டாட்டம் படிக்கிணும் சரியாய்யா’னு சலுகைகள் அறிவிக்கிறது ஆகிய இதுவெல்லாம் அடுத்ததுதான்.
அவருக்கும் செல்லதுரை மேல ரொம்பப் பிரியம். ‘தொரை _ தொரை’ன்னுக்கிட்டே இருப்பார். ‘அது இல்ல இது இல்லேன்னு தங்கச்சிபுள்ள எதுக்கும் ஏங்கிப் போயிரக் கூடாது’ என்பதில் நூறு சதவீதம் ஈடுபாட்டோட இருப்பார்.
லீவு நாட்களில் சைக்கிளில் வந்து தன் ஊருக்குக் கூட்டிப் போய்விடுவார். அவருடைய ஊருக்குப் போய்விட்டால் போதும் முடிவெட்டி, அழகாக்கி, குளிப்பாட்டி, பவுடர் பூசி... என சகல சவர்ட்டனைகளும் பலமாக இருக்கும் இவனுக்கு. அவரே போட்டுவிடும்வரை கையிலேயே வைத்துக் கொண்டிருப்பான் சட்டையை. காட்டுக்குப் போகும்போது வெளிமாடத்தில் தக்காளிச் சோறு, புளியோதரை, கூட்டாஞ்சோறு மாதிரி ஏதேனுமொரு கிளறிய சோற்றையும் பட்டாணிக்காரணோ, பேரிக்காய் விற்பவனோ வந்தால் வாங்கித்திங்க நாலணாவும் வைத்துவிட்டுப் போவார். மதியத்திற்கு அந்த சோற்றுச் சட்டியை எடுத்துத் தரச்சொல்லி பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம் சொல்லிவிட்டுப் போவார். ‘தனக்கு எட்டாத உயரத்தில் ஏன் மாமா (சோற்றையும்) காசை வைத்துட்டுப் போறார்’ணு யோசிப்பான் இவன். கையில குடுத்தா தொலைத்து விடுவான்ங்கிறது அவர் யோசனை. எங்காவது விளையாடிவிட்டு வந்து பார்ப்பான். பட்டாணிக் காரரோ பேரிக்காய்காரரோ காசை எடுத்துக்கொண்டு தீனியை மாடத்தில் வைத்துவிட்டுப் போயிருப்பார். அத்தனை ஏற்பாடுகள் செய்திருப்பார் மாமா. சட்டை ‘சேப்’பில் வைத்துக்கொண்டு இக்கினி இக்கினியாக பொழுதினிக்கும் திம்பான்.
வேலை கலைந்து வரும்போது கடைகண்ணிகளில் வாங்கிய ஏதாவதொரு தீனிப் பொட்டலத்தோடு பயல்கள் விளையாடுமிடத்திற்கு தேடிவந்து சற்று தள்ளி நின்றுகொண்டு ‘தொரே...ய்’ என கூப்பிட்ட அவர் குரலுக்கு ஓ....டி வரும் அவனது அழகில் உருகிப் போய்விடுவார் மாமா. இத்தனை ஆத்மார்த்தம் ‘துரை’மேல் அவன் மாமாவுக்கு.
பொழுதிருட்ட வந்த கொளக்காநத்தம் டவுன் பஸ்ஸிலிருந்து அவர் இறங்கியதும் ‘மா...மா...’ன்னுக்கிட்டே ஓடிவந்து கையிலிருந்த பையை வாங்கித் தோளில் மாட்டிக்கொண்டு அவர் ஆள்காட்டி விரலைப் பிடித்துக்கொண்டு வந்தான்.
புது சட்டையும் நிறைய தின்பண்டங்களும் வாங்கி வந்திருந்தார். புதுச்சட்டையை போட்டுவிட்டு அழகு பார்த்ததும் கழட்டச்சொல்லி மடித்து பெட்டிக்குள் வைத்தாள் அம்மா. அப்போதைக்கு மட்டும் திங்க தீனி கொடுத்துவிட்டு மீதியை தூக்குப்போவணிக்குள் வைத்து எறும்பு புகாமல் மூடி கூரைக்கழியில் தொங்கவிட்டாள்.
மாமா மடியில் உட்கார்ந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்சிக் கொஞ்சித் தின்றான், வேகமாகத் தின்றால் சீக்கிரமே தீர்ந்துபோய்விடும் என்பதால்.
வீட்டிற்குப் பின்புறம் அம்மா போகிற நேரம் பார்த்து கிளம்பிவிட்டான். சினேகிதர்களுடன் குந்திக்கொண்டு இக்கினி இக்கினியாக அவர்களுக்கும் கொடுத்துச் சாப்பிடுவான். நண்பர்களோடு இப்படிச் சாப்பிடுவதில் ஒரு மனப்புலர்வு அவனுக்கு. ‘எங்க மாமா வாங்கிட்டு வந்திச்சி’ என்று வேறு சொல்லிக்குவான். பிரதிபலனாக எந்த விளையாட்டு விளையாண்டாலும் துரைக்கு ரொம்ப சலுகை தருவார்கள் சேத்தாளிப் பயல்கள்.
ஒருவன் தீனிகொண்டுவந்தால் அவனுக்கு அன்று விளையாட்டில் செல்லம் கொடுப்பது இந்த பயல்களின் ஜனநாயகம்.
பொழுதுக்கும் சும்மாக்கிம் சும்மாக்கிம் வீட்டுக்குப் போறதும் ‘ஊரான் புள்ளிங்களுக்கு அள்ளி அள்ளி தானம் பண்ற்த்துக்கா’ என்று தரமறுக்கும் அம்மாவின் தடையை மீறி தீனி வாங்கி வருவதுமாகவும் சேத்தாளிகளோடு களிப்பதுமாகவே இருப்பான்.
மறுநாள் காலை, வெளிய துறுவுக்கு மாமாவை ஏரிக்கு கூட்டிக்கிட்டுப் போறதிலிருந்து டீ குடித்து கடையில் இட்லி தோசை சாப்பிடும் வரை அவ்வளவும் முடிந்ததும்தான் வில்லங்கமே ஆரம்பமானது துரைக்கு. பள்ளிக்கூடம் போகணுமே!
இதிலென்ன வில்லங்கமாம்?
பள்ளிக்கூடம் போய்விட்டு சாயங்காலம் வருவதற்குள் மாமா ஊருக்குப் போய்விட்டால் என்ன செய்வது. ஊருக்குப் போகும்போது அருகில் இருந்தால்தானே ‘ஊர்காசு’ கொடுத்துவிட்டுப் போவார். இல்லாவிட்டால் போச்சே. பள்ளிக்குத் தயாராகி வெளியே போகுமுன் டாடா சொல்றமாதிரி மாமாவைப் பார்த்தான். புரிந்துகொண்டவராய் ‘போய்ட்டு வா தொர, மாமா ரெண்டு நா கழிச்சித்தாம் போவேன், டாடா...’’ என்றார். பதிலுக்கு ‘கையசைத்து’ புறப்பட்டான் பூரித்த முகத்துடன். பள்ளிக்கூடத்தில் பசங்களுக்குக் கொடுக்க மறக்காமல் பையில் கொஞ்சம் தீனியும் எடுத்துக்கொண்டான்.
ஒருமுறை கொடுக்கிற காசை அவர் அடுத்ததடவை வரும்வரை வைத்திருப்பான். செலவுகூட செய்யமாட்டன். அம்மா தரும் சில்லரைகளைக் கொண்டு தீனி வாங்கித் திம்பான். சமயத்தில் நூறு ரூபாய்கூட தருவார். எங்கே போனாலும் கால்சட்டை பையிலேயே வைத்துக்கொண்டு திரிவான். அப்பப்போ பைக்குள் கைவிட்டு தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்வான். தூங்குக்மபோது கூட அப்படியேதான். ‘எனக்கு நூறுவா குடுத்துருக்காருங்கி எங்க மாம்மா’ என்பான் சேத்தாளிகளிடம். பிறகு புத்தகத்துக்கு நடுவே வைப்பான். விளையாட்டு மைதானத்திலிருந்து வீடு வரும்போதெல்லாம் புத்தகத்தை திறந்து ஊர்ஜிதப்படுத்திக்குவான், அம்மா எடுத்து வைத்துக்கொள்வாள் என்கிற பயம்தான்.
சமயத்தில் ‘இவ்ளோ பணத்தை என்னாப்பா செய்யப்போற, கொண்டா, நா வச்சிருக்கேன். நீ கேக்குறப்பல்லாம் அம்மா தாரேன்’ என வாங்கிக்கொண்டு ரெண்டு ரூவா துட்டை மட்டும் குடுப்பா. எவ்வளவோ கெஞ்சுவான், ஒண்ணும் நடக்காது. அதற்காகவே அம்மாவிடம் தரமாட்டான்.
பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது பக்கத்து வீட்டார் தென்பட்டால் ‘எங்கூட்ல மாமா இருக்கா’ எனக் கெட்டான். முக்கம் திரும்பும்போது வீட்டிற்கு வெளியே மாமா நிற்கிறாரா என்று பார்த்தான். வீட்டை நெருங்கும்போது மாமாவின் செருப்பு இருக்கிறதாவென நோட்டம் விட்டான். இல்லை.
‘சொரக்’ என்றது மனம்.
உள்ளே நுழைந்ததும் மாமாவின் சட்டையோ, பையோ இருக்கிறதாவென பார்த்தான், இல்லை. மாமா ஊருக்குப் போய்விட்டாரென்பது உறுதியாகிவிட்டது அவனுக்கு.
‘மாமா எங்கமா’ என்றான், ஏக்கமாக. ‘மாடு பார்த்துட்டு வர்ரேன்னு ‘தெரணி’ வரைக்கும் போயிருக்காருப்பா’ என்றாள் அம்மா. ‘மாமா தன்னிடம் கொடுத்துவிடச்சொல்லி காசு கொடுத்திருப்பார். அதை மறைக்கத்தான் அம்மா இப்படி சொல்கிறாள்’ என்று நினைத்தான்.
பொழுதும் இறங்கிவிட்டது.
இன்னும் ஆளைக் காணோம். ‘பதக்கு... பதக்கு’னு அடிச்சிக்கிது இவனுக்கு மனசு. விளையாட முடியல. வீட்டுக்கும் பஸ் ஸ்டாண்டுக்குமாவே பாய்ச்சலாக இருக்கான். ராத்திரி சோற்று நேரமும் முடிந்துவிட்டது. இன்னும் மாமா வரவில்லை. சோறுகூட சரியாக போகலை, துரைக்கு.
‘என்னம்மா இன்னங் காணம் மாமாவ, என்றான். ‘தெரணிலருந்தவாக்குல அவசரமா அப்படியே ஊருக்குப் போய்ட்டாராம்பா’ என்றாள். ‘போ. நீ பொய் சொல்ற’ என்றான். மூஞ்சை உம்முன்னு தூக்கி வைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அப்பாவிடமும் பேசவில்லை. பிறகு திடீரென குறுக்கிக்கொண்டு படுத்துக்கொண்டான்.தூங்கிப் போய்விட்டான்.
விடிந்தது.
ஒரு மாதிரியாவேதான் இருந்தான். ‘நெசமாவே அப்படியேதான்டா போய்ட்டாரு. இல்லேன்னா உனக்கு ஊர்க்காசுகூட குடுக்காம போவாரா’ என்று எவ்வளவோ சொன்னாள் அம்மா.
எந்த பதிலும் சொல்லாமல் கம்முன்னே இருந்தான். காசு குடுன்னும் கேட்கலை. ‘நெசம்மா...’ என்றான். ‘ஆமாம்பா’ங்கிற மாதிரி தலையசைத்தாள். பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டான். ‘பாவம்டி புள்ள, மாமா குடுத்தாருன்னு பத்து ரூவாயைத்தான் குடேன், ஏங்கிப் போறான்ல’ என்றார் அப்பா.
மனசு கேட்காமல் ஐந்து ரூவா நோட்டை நீட்டி ‘இந்தா சாமி, தீனி வாங்கிக்க’ன்னாள் அம்மா. அவன் வாங்கவில்லை. பள்ளிக்கு நடையைக் கட்டினான்.
‘காசுக்காகத்தான் இப்படியிருக்கிறான்’ என்ற அவர்களின் கணக்கு தப்பாகிவிட்டது. அவனது மவுனமும் போக்கும் அப்போதைக்கு புரியவில்லை இருவருக்கும்.
தீனிகூட எடுக்காமல் போய்கொண்டிருந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக